ரம்மியமான கோடியக்கரையில் வட்டமிடும் வெளிநாட்டு பறவைகள்


ரம்மியமான கோடியக்கரையில் வட்டமிடும் வெளிநாட்டு பறவைகள்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:30 AM IST (Updated: 21 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரம்மியமான கோடியக்கரையில் வெளிநாட்டு பறவைகள் வட்டமடித்து பறக்கின்றன. இங்கு சுற்றுலா வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

ரம்மியமான கோடியக்கரையில் வெளிநாட்டு பறவைகள் வட்டமடித்து பறக்கின்றன. இங்கு சுற்றுலா வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோடியக்கரை சரணாலயம்

நெய்தல் நிலப்பகுதியான நாகை மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாக உள்ளன. இதில் கோடியக்கரை வனவிலங்குகள், பறவைகளின் கூடாரமாக திகழ்கிறது. சரணாலய பகுதியாகவும், கடலும், காடும் இணைந்த பகுதியாகவும் உள்ள கோடியக்கரைக்கு ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.

அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் குளிர் காலமாகும். அங்கு நிலவும் குளிரை சமாளிப்பதற்காக 290 வகையான பறவைகள் பல ஆயிரம் மைல்கள் தூரம் வானில் சிறகடித்து கோடியக்கரை நோக்கி படையெடுத்து வருகின்றன.

ரம்மியமான கோடியக்கரை

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கோடியக்கரை சரணாலய பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி ரம்மியமாக காட்சி தருகின்றன. இதன் காரணமாக வெளிநாட்டு பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக கோடியக்கரை சரணாலயத்துக்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து 'ஆலா' பறவைகள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன. ரஷியா, ஈராக், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சிறகடித்து வந்துள்ள பூநாரை, கரண்டி மூக்குநாரை. சைபீரிய நாட்டு பறவையான உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம் போன்ற பறவைகள் தற்போது கோடியக்கரை வான்வெளியை வண்ணமயமாக்கி வட்டமடித்து பறப்பதை கண் குளிர காண முடிகிறது.

கண்கொள்ளா காட்சி

வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளதால் கோடியக்கரை சரணாலய பகுதியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை முகாமிட்டுள்ள பறவைகள் கூட்டமும், காதுக்கு எட்டும் தொலைவு வரை பறவைகள் எழுப்பும் கீச்சொலியும் இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரை உண்ணும் பறவைகளை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

20 ஆயிரம் ஏக்கர்

வெளிநாட்டு பறவைகளை கோடியக்கரையில் உள்ள இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் காண முடிகிறது. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. ஈரப்புல நில பகுதியான இங்கு கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

கோடியக்கரை வன பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான், வெளிமான், குதிரை, நரி, குரங்கு, பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. கோடியக்கரையை தமிழக அரசு 1967-ம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது. 2002-ம் ஆண்டு வனவிலங்குகள், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சுற்றுலா வசதிகள்

இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். பறவைகளின் அழகை ரசிப்பதற்கு படகு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story