இயற்கை ஆர்வலர்களின் இன்பவனமாக விளங்கும் வடுவூர் பறவைகள் சரணாலயம்


இயற்கை ஆர்வலர்களின் இன்பவனமாக விளங்கும் வடுவூர் பறவைகள் சரணாலயம்
x

இயற்கை ஆர்வலர்களுக்கு இன்பவனமாக வடுவூர் பறவைகள் சரணாலயம் விளங்குகிறது. தற்போது கோடை காலத்திலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன.

திருவாரூர்

வடுவூர்;

இயற்கை ஆர்வலர்களுக்கு இன்பவனமாக வடுவூர் பறவைகள் சரணாலயம் விளங்குகிறது. தற்போது கோடை காலத்திலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன.

வடுவூர் பறவைகள் சரணாலயம்

தஞ்சாவூர்-கோடியக்கரை மாநில நெடுஞ்சாலையில், தஞ்சையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வடுவூர். இங்கு நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்தில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான பறவைகள் வந்து செல்வது வழக்கம்தற்போது இங்கு நாரை வகைகளான எர்கெட், ஹெரான் வகை பறவைகள் மற்றும் பட்டை தலை வாத்து ஆகியவை காணப்படுகின்றன. இயற்கை ஆர்வலர்களை அதிகமாக ஈர்க்கும் இன்பவனமாக விளங்குவது மட்டுமின்றி கடந்த வாரத்தில் மட்டும் அதிகமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களை இந்த சரணாலயம் ஈர்த்துள்ளது.

128.10 எக்டேர் பரப்பளவு

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில், கடந்த 1999-ம் ஆண்டு வடுவூர் அக்ரஹாரம் பஞ்சாயத்தில் உள்ள பாசன குளத்தை சுற்றியுள்ள 128.10 எக்டேர் பரப்பளவுள்ள இடத்தில் இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது. காவிரி ஆறு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் தண்ணீர் பெறும் இந்த குளம் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளது.சீசன் காலங்களில் இங்கு தண்ணீர் பறவைகளான வெள்ளை அரிவாள் மூக்கன், வர்ண நாரைகள்,சாம்பல் கூழைக்கிடா,ஊசிவால் வாத்து, நீர்க்காகம், கிளுவை, நாரை வகைகள், துடுப்பு மூக்கு நாரை மற்றும் பாம்புத்தாரா போன்ற பறவைகள் காணப்படுகிறது. இந்த சரணாலயம் பொதுமக்களின் பார்வைக்காக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சரணாலயத்தின் சிறப்பம்சங்கள்

பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் சரணாலயத்தில் அவர்கள் பார்வையிடும் நேரத்தில் எடுக்கப்படும் 'செல்பி' களை காட்சிப்படுத்தும் எலெக்ட்ரானிக் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையில் இருந்து பார்வையிடும் வகையில் சரணாலயத்தின் வெளிப்புற பகுதிகளில் பார்வை கோபுரங்கள் மற்றும் சாரணாலயத்தை சைக்கிளில் சுற்றிப்பார்ப்பதற்கு வசதியாக நான்கு சைக்கிள்கள் உள்ளன.பார்வையாளர்கள் வேண்டுகோளின் அடிப்படையில் பைனாகுலர்கள் வழங்கப்படுகிறது. பாரம்பரிய பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகளும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் ஒத்துழைப்பு

தடையின்றி உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் இடங்களுக்கு அருகில் பறவைகள் தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்ளும். இது சரணாலய பகுதி மற்றும் அருகில் உள்ள வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன.சரணாலய பகுதியில் இடம் இல்லாத பட்சத்தில் பறவைகள், தங்களுக்கு தேவையான இடத்தை வயல் வெளிகளிலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். மேலும் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகளும் இதற்கு துணைபுரியும் வகையில் சரணாலயத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

கோடைகாலத்திலும் பறவைகள் வருகை

பறவைகள் மட்டுமின்றி அவ்வப்போது நீர்நாய்களும் தென்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடைக்காலத்தில் குளம் வற்றிய நேரத்தில் குளிர்ந்த இடங்களை தேடி பறவைகள் பெயர்ந்து வந்தன. தற்போது குளம் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளதால், வெயில் காலங்களிலும் தண்ணீர் உள்ளது.இதனால் கோடைகாலத்திலும் உள்ளூர் கோடைக்கால பறவைகள் மற்றும் குளிர் பிரதேசங்களில் இருந்து வரும் அயல்நாட்டு பறவைகளையும் ஒன்று சேர்த்து காண முடிகிறது என்று மாவட்ட வன அலுவலர் அறிவொளி தெரிவித்தார்.


Next Story