குறைமாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்


குறைமாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்
x
திருப்பூர்


காங்கயத்தை சேர்ந்த பெண் 28 வாரம் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த மே மாதம் 2-ந் தேதி இரவு வீட்டிலேயே குறைமாதத்தில், குறைந்த எடையுடன் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தை 900 கிராம் எடையுடன் இருந்தது. 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த குழந்தை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த குழந்தை குறைமாதம், எடை குறைவாக இருந்ததாலும், தங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாலும், குழந்தையின் பெற்றோர் தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்று மருத்துவமனையிலேயே ஒப்படைத்து சென்றனர்.

மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் முருகேசன் அறிவுறுத்தலின்படி, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு குழந்தை நலமாக குணமடைந்தது. பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர் செந்தில்குமார், உதவி டாக்டர்கள் தனசேகர், பிரியா விசுவாசம், அருள்குமார், ராஜேஷ் கண்ணா ஆகியோர் உதவியோடு 104 நாட்களில் அந்த குழந்தை 2 கிலோ 205 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. அந்த குழந்தையை டாக்டர்கள் குழுவினர், குழந்தைகள் நலக்குழுமுன் ஆஜர்படுத்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.


Next Story