பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது
பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆவது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.
குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப்பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்துப்பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.
சட்டத்திருத்தம்
அதற்காக பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும்.
அதில் மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும்.
அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும்.
அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
விழிப்புணர்வு
பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சிவகாசி மகாலிங்கம்:- 2000-ம் ஆண்டிற்கு பின்னர் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. அதற்கு முன்னர் பிறந்தவர்கள் எல்லாம் பள்ளி சான்றிதழ்களைதான் பிறப்பு சான்றிதழாக பயன்படுத்தி வந்தனர். தற்போது திடீரென அரசு வேலை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் என்றால் 20 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவர்கள் எப்படி பெற முடியும். கடந்த சில ஆண்டுகளாக ஆதார் அட்டையை முக்கிய பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். அதனால் இனி வரும் காலங்களிலும் ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழாக பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். 2023-ல் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழும், இறப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழும் கட்டாயம் என்று அறிவிக்க வேண்டும்.
ஏமாற்றம் தவிர்ப்பு
திருச்சுழி அலகுபாண்டி:-
பொதுவாக ஒரு சட்டத்தை திருத்தும்போது, அதில் பெருவாரியான மக்கள் பயன்பெறவேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த சட்டத்திருத்தம் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதேபோல தற்போது அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் முக்கியம் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும். இந்த சட்டம் பொதுமக்களுக்கு நன்மை தான்.
தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் ராஜ்மோகன்:-
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதியப்படுவதால் நம்முடைய சொத்து பாதுகாப்பாக இருக்கும். வேறு நபரால் விற்க முடியாது. இது முழுமையான ஆதாரமாக இருக்கும். ஆனால் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் திருத்துவதற்கு வழிமுறைகள் சிரமமாக உள்ளது அதனை எளிதாக்கினால் நல்லது. இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களால் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும்.
வரவேற்பு
பேராசிரியை ஜான்சிராணி:-
வாக்காளர் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பாஸ்போர்ட் வாங்குவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது தான். அரசு சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஒரு சில சட்டங்கள் கஷ்டமாக இருந்தாலும் அதன் நன்மை கருதி ஏற்றுக்கொண்டால் தான் அதன் பயனை நாம் அனுபவிக்க முடியும்.
இந்தியாவில் பிறப்பும் இறப்பும்
சமீபத்திய தகவலின்படி இந்தியாவில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 2 கோடியே 69 லட்சத்து 32 ஆயிரத்து 586 பிறப்பு நிகழ்கிறது. பிறப்பு விகிதம் 17.163 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக இருக்கிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 73 ஆயிரத்து 787 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 3 ஆயிரத்து 74 பேரும், ஒரு நிமிடத்துக்கு 51 பேரும் பூமியில் புதிதாக அவதரிக்கிறார்கள்.
அதேபோல இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 97 லட்சத்து 78 ஆயிரத்து 73 இறப்புகள் நிகழ்கிறது. இறப்பு விகிதம் 7.3 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக உள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 26 ஆயிரத்து 789 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 1,116 பேரும், ஒரு நிமிடத்துக்கு 19 பேரும் இந்த பூலோக வாழ்வை நீத்து, உயிர் துறக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய மக்கள் தொகையைவிட
இந்தியாவில் ஓர் ஆண்டில்
பிறப்பவர் எண்ணிக்கை அதிகம்
உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 800 கோடியை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதில், இந்தியாவினுடைய பங்களிப்பு மட்டும் 141 கோடியே 20 லட்சத்தையும் தாண்டி நிற்காமல் செல்கிறது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி, ஆஸ்திரேலிய நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 2 கோடியே 69 லட்சம் பேர் புதிதாக பிறக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை விடவும், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பிறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் முக்கியமானதாகும். இதற்காக மத்திய அரசு கடந்த 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் உருவாக்கப்பட்டன. அதில், கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு நடந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் கிடையாது.
22-வது நாள் முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்வதற்கு தாமத கட்டணம் ரூ.100-ம், 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்வதற்கு ரூ.200-ம், ஓராண்டுக்கு மேல் பதிவதற்கு ரூ.500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், கூடுதல் நகலுக்கு தலா ரூ.200-ம் கட்டணமாக உள்ளது.