பல்வேறு கட்சிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல்:
திருச்செங்கோட்டில் பல்வேறு கட்சிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அம்பேத்கர் பிறந்த நாள்
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா பா.ஜனதா கட்சி சார்பில் திருச்செங்கோடு தெற்கு ஒன்றியம் புது புளியம்பட்டி கிராமம் எல்லப்பாளையத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது.
இதில் கட்சியின் மாநில துணைத்தலைவரும், சேலம் கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நற்பணி மன்றம்
திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியில் பாரத ரத்னா டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மன்றத்தின் தலைவர் விக்னேஷ்வரன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராஜ்கமல், செயலாளர் வினித், பொருளாளர் யுனிவரசன், செயற்குழு தலைவர் ரமன பிரபத் மற்றும் மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மேள தாளங்கள் முழங்க கேக் வெட்டி கொண்டாடினர்.
இதேபோல் திராவிடர் விடுதலை கழக நகர செயலாளர் பூபதி தலைமையில் விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் புதிய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் அம்பேத்கர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்
திருச்செங்கோடு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் நரிப்பள்ளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுகுமார், மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், நகர துணை செயலாளர் கார்த்திக், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி, கட்டிட சங்க துணை செயலாளர் கோபிராஜ் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கதிர்வேல் தங்கராசு, முருகேசன், பாரதி, செங்கோட்டுவேல், புகழேந்தி, நரேந்திரன், லோகநாதன், ஜெயக்குமார், நளினாதேவி, முனுசாமி, உதயகுமார், ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மங்களபுரம், ஆயில்பட்டி, திம்மநாயக்கன்பட்டி பகுதிகளிலும் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.