பிறந்த தினம் கொண்டாட்டம்: தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு


பிறந்த தினம் கொண்டாட்டம்: தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு
x

தாமிரபரணி ஆறு பிறந்த தினத்தையொட்டி நெல்லையில் அந்த ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

தாமிரபரணி ஆறு பிறந்த தினத்தையொட்டி நெல்லையில் அந்த ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தாமிரபரணி ஆறு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்படைய செய்கிறது. மேலும் பல மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்த்து வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தாமிரபரணி பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

சிறப்பு ஆரத்தி

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சின்ன சங்கரன்கோவில், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர் உள்ளிட்ட 23 இடங்களில் தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே படித்துறையில் ஓம்கார விநாயகர் அறக்கட்டளை தலைவர் சுவாமி அர்ஜுனன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அகத்தியர், தாமிரபரணி அன்னையின் உருவப்படங்களை வைத்து தாமிரபரணி நதியை போற்றும் பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது. பின்னர் தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாக்க வேண்டும்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தாமிரபரணி ஆறு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும்" என்றனர். மேலும் இதுதொடர்பாக உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.


Next Story