ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் "சேதுசமுத்திர திட்டத்தை பா.ஜனதா எதிர்க்கும்"


ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் சேதுசமுத்திர திட்டத்தை பா.ஜனதா எதிர்க்கும்
x

“ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் சேதுசமுத்திர திட்டத்தை பா.ஜனதா எதிர்க்கும்” என்று நெல்லையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். முன்னதாக நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் தி.மு.க. அரசு சேதுசமுத்திர திட்டத்திற்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சேதுசமுத்திர திட்டம் பற்றி 2008-ல் இருந்து தொடர்ந்து பேசி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பழைய நிலைப்பாட்டின்படி தமிழக அரசு சேதுசமுத்திர திட்டம் வேண்டும் என்று நினைத்தால் அதனை பா.ஜனதா எதிர்க்கும். பழைய திட்டத்தின்படி அதை நடைமுறைப்படுத்தினால் ராமர் பாலம் சேதமடையும்.

ஆதரிப்போம்

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் ஒரு உறுதிமொழி பத்திரம் கொடுக்கப்பட்டது. இதில் பழைய நிலைப்பாட்டின்படி சேதுசமுத்திர திட்டம் அமல்படுத்தப்படாது, வேறு நிலைப்பாட்டில் இந்த திட்டத்தை கொண்டுவர அரசு யோசித்து கொண்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ராமர் பாலத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கொண்டு வந்தால் அதனை நாங்கள் ஆதரிப்போம். இந்த திட்டம் குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறும் போது, இந்த திட்டத்தால் மீனவர்களுக்கு பயன்இல்லை, கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோாின் நிறுவனங்களுக்கு தான் பயன், என்றார்.

பா.ஜனதா ஊழியரா?

கவர்னரை பா.ஜனதா ஊழியராக பயன்படுத்தவில்லை. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் தவறுகள் குறித்து அந்தந்த மாநில கவர்னர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதே போல் தான் தமிழகத்தில் நடக்கும் தவறுகள் குறித்து கவர்னர் கேள்வி கேட்கிறார். இது தவறு இல்லை.

தமிழக அரசு இதுவரை 84 மசோதாக்களை கவர்னருக்கு அனுப்பி உள்ளது. இதில் 69 மசோதாக்கள் கையெழுத்திடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மீதி உள்ள ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து கவர்னர் விளக்கம் கேட்டு உள்ளார். அதற்கு தமிழக அரசு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வுடன் பிரச்சினை இல்லை

பா.ஜனதாவிற்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட விருப்பம் இல்லை. மத்திய மந்திரி முருகன் போட்டியிட உள்ளார். ஆனால் யார் போட்டியிட போகிறார்கள் என்று முழுமையாக எந்த தகவலும் இல்லை. தமிழகத்தில் பிரதமர் போட்டியிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story