பா.ஜனதாவினர் சாலைமறியல் போராட்டம்
ஓசூரில் அரசு பள்ளி மைதானத்தில் நூலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:
ஓசூரில் அரசு பள்ளி மைதானத்தில் நூலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நூலகம் அமைக்க எதிர்ப்பு
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் காமராஜ் காலனியில் உள்ளது. நகரின் மத்தியில் உள்ள இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானவர்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இதுதவிர முதியோர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானவர்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விளையாட்டு மைதானத்தில் ஒரு பகுதியில் நூலகம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பா.ஜனதா போராட்டம்
இதற்கிடையே அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் நூலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் நூலகம் முன்பும், காமராஜ் காலனி சாலையிலும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
மாநில அமைப்புசாரா பிரிவு துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் பிரவீன்குமார், பாபு, மாவட்ட துணைத்தலைவர்கள் முருகன், சகுந்தலா, மாநில வர்த்தக பிரிவு துணைத் தலைவர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் சத்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் மறியல் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்று இடத்தில் நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் காமராஜ் காலனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.