இந்திய கலாசாரத்தை பேணிக்காத்து சுயசார்பு இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார்
இந்திய கலாசாரத்தை பேணிக்காத்து சுயசார்பு இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில் பேசினார்.
இந்திய கலாசாரத்தை பேணிக்காத்து சுயசார்பு இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில் பேசினார்.
பொதுக்கூட்டம்
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு திருப்பூர் ஆலாங்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:-
'பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனை வளர்ப்போம்' என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டுள்ளது. பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை சுட்டிக்காட்டுபவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது. பலமான பிரதமராக மோடி விளங்கி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுயசார்பு இந்தியா
கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி மகிழ்ந்ததை காண முடிந்தது. இந்துக்களின் வாழ்வியல் முறையை விநாயகர் சதுர்த்தி விழா கற்றுக்கொடுக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று தி.மு.க. கூறி வருகிறது. கூட்டாட்சி என்றால் கூட்டணி கட்சிகள் துறையை பங்கிட்டு கொண்டு கொள்ளையடிப்பது என்பது தான் நடந்து வருகிறது.
தனி மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல் படையின் சின்னமாக வீரசிவாஜியின் ராஜமுத்திரை இடம்பெற்றுள்ளது. சுயசார்பு இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார். இந்திய கலாசாரத்தை பேணிக்காத்து வருகிறார். உலக நாடுகள் இந்திய கலாசாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்திய கலாசாரம் வழிகாட்டியாக விளங்கி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி
அனைத்து மதத்தையும் ஒன்றாக நினைத்து பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து கூறி வருகிறார். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து கூறவில்லை. இது மதசார்பற்ற அரசா என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ராமர் கோவில் கட்ட இந்தியா முழுவதும் நிதி திரட்டப்பட்டபோது அதிக நிதி அளித்த முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகம் எப்போதும் ஆன்மிக பூமியாகும். தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட நம்மிடம் வாக்கு என்ற ஆயுதம் உள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜனதாவுக்கு வழங்க வேண்டும்.
திருப்பூரில் இருந்து பா.ஜனதா எம்.பி. கிடைக்க வேண்டும். பின்னலாடை தொழில் மேலும் வளர்ச்சி பெற மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், ஆர்.எஸ்.எஸ்.கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, சேவா பாரதி மாநில துணை தலைவர் எக்ஸ்லான் ராமசாமி, இந்து முன்னணி மாநில செயலாளர்கள் செந்தில்குமார், தாமு வெங்கடேசன், கிருஷ்ணன், சண்முகம், சேவுகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் விநாயகர் சிலைகள் அனைத்தும் சாமளாபுரம் குளத்தில் கரைக்க கொண்டு செல்லப்பட்டன.