மத்திய அரசின் திட்டங்களை வீடு, வீடாக எடுத்துக்கூற வேண்டும்


மத்திய அரசின் திட்டங்களை வீடு, வீடாக எடுத்துக்கூற வேண்டும்
x
திருப்பூர்


பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகிறது. துறைகளின் சாதனைகள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பணி நம்மிடம் உள்ளது. அதுபோல் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சென்று சேர்த்து ஒவ்வொருவரும் பயனடையும் பணியும் நமக்கு உள்ளது.

பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மலர்கொடி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், காடேஸ்வர தங்கராஜ், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஓ.பி.சி. அணியின் தலைவர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருண் ஒருங்கிணைத்தார்.


Next Story