பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வீட்டில் திடீர் தீ விபத்து
பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் புத்தகங்கள், படுக்கை எரிந்து நாசமாயின.
வேலூர் டோல்கேட் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தியாயினி. இவர் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் மற்றும் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆவார். கார்த்தியாயினி நேற்று ஆம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். வீட்டில் அவருடைய தாய் மற்றும் மகள், மகன் இருந்தனர்.
வீட்டு மாடியில் உள்ள அறையில் மகள், மகன் பழைய பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படுக்கையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மள, மளவென்று பற்றி எரிந்து அலமாரியில் இருந்த புத்தகங்களில் தீப்பற்றியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அலறியடித்தபடி மாடியில் இருந்து கீழே இறங்கினர்.
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் முற்றிலும் தீ அணைக்கப்பட்டது. இதில், படுக்கை, புத்தகங்கள் மற்றும் சுவற்றில் மாட்டியிருந்த போட்டாக்கள் எரிந்து நாசமாயின என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.