பா.ஜ.க. கூட்டத்தில் நிர்வாகிகளிடையே திடீர் மோதல் நாற்காலி வீச்சு
சங்கராபுரத்தில் பா.ஜ.க. ஆய்வு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சங்கராபுரம்
ஆய்வு கூட்டம்
சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பா.ஜ.க. சக்தி கேந்திரா வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
அப்பொழுது கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், தற்போதைய மாவட்ட துணை தலைவருமான ரவி தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட தலைவர் அருளிடம் சென்று ஏன் பழைய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமிக்கிறீர்கள்? எங்களை நீக்கியதற்கான காரணம் என்ன? என்று விளக்கம் கேட்டார்.
நாற்காலி வீச்சு
இதனால் ரவி ஆதரவாளர்களுக்கும், அருளின் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்து ஒருவரை நோக்கி ஒருவர் வீசினர். இதனால் திருமண மண்டபம் களேபரமாக காட்சி அளித்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
பரபரப்பு
பின்னர் மாநில துணை தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி அங்கு வந்தார். தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. கூட்டத்தில் காட்சியினரிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி கொண்ட சம்பவத்தால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.