'நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.க. தேசிய தலைமை முடிவு செய்யும்' எடப்பாடி பழனிசாமி பேட்டி


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.க. தேசிய தலைமை முடிவு செய்யும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

‘நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.க. தேசிய தலைமையே முடிவு செய்யும்’ என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சேலம்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதன் முதலாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கினார்.

சேலம் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய தலைவர்களே முடிவு

தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியுடன் கூட்டணி குறித்து தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்பார்க்கிறோம்.

அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை. எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் சோதனைகளை சந்தித்தார். அதேபோல், தற்போது சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சீர்வரிசையுடன் வாழ்த்து

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க நேற்று மதியம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் ஆடு, மாடு, கோழி, மா, பலா, வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை பொருட்களுடன் வந்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான நிர்வாகிகளும் வந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அண்ணாமலைக்கு பதில்

சென்னையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க. கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. அது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, கூட்டணி குறித்து பா.ஜனதா தலைமையே முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story