பா.ஜ.க. நிர்வாகிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு ஒத்தி வைப்பு
பா.ஜ.க. நிர்வாகிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு ஒத்தி வைக்கப்பட்டது.
மதுரை,
தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த மாதம் 7-ந்தேதி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மை பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் ஒருவிதமான பதற்றம் நிலவுவதாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் எனவும் கூறியிருந்தார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் நிபந்தனையை பின்பற்றவில்லை என்றும் அதனால் அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போலீசார் தரப்பில் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு டீலா பானு நேற்று உத்தரவிட்டார்.