பா.ஜ.க. பிரமுகர் கைது
கல்லூரி பேராசிரியரிடம் தகராறில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், ஒரு மாணவியிடம் கல்லூரியில் கீழே கிடக்கும் குப்பைகளை எடுக்க சொல்லி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவரின் பெற்றோரை அழைத்து வருமாறு கூறி உள்ளனர். இதை தொடர்ந்து நேற்று மாணவரின் பெற்றோர் மற்றும் பா.ஜ.க கல்வியாளர் பிரிவு மணிகண்டன் ஆகியோர் கல்லூரிக்கு சென்று உள்ளனர். அப்போது கல்லூரி பேராசிரியரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி வணிகவியல் துறை தலைவர் மாரிமுத்து, வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.