விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் நகர பா.ஜ.க. 7-வது வார்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.அன்பழகன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி.மூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வர், நகர துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். கண்டன ஆர்ப்பாட்டத்தை நகர செயலாளர் டி.குமார் தொடங்கி வைத்த பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலனுக்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை, தமிழக அரசு கண்டிக்காததை கண்டித்தும், தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்காததை கண்டித்தும், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், தக்காளி, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் ராஜேஷ் நன்றி கூறினார்.