பா.ஜனதா ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் உள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில துணைத் தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனாதனம் குறித்து, அதன் தர்மம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும்படி பேசக்கூடாது என கூறியுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வக்கீல் திருவாரூர் அரசு கல்லூரியில் அளிக்கப்பட்ட சுற்றறிக்கை கருத்தை திரும்ப பெற்றுள்ளார். எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
கனிமொழி எம்.பி. மத்திய அரசு திட்டங்களில் குறிப்பாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசு வீடு கட்டும் திட்டம், காப்பீட்டு திட்டம், 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசு நிதியை வழங்குகிறது. ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்தாமல் தமிழக அரசுதான் முறைகேடு செய்கிறது. எனவே, அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மகளிர் உரிமைத்தொகை வழங்கியதில் தி.மு.க.வினருக்கே முன்னுரிமை அளித்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போன்று செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.