நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

எந்த பணியும் நடைபெறவில்லை என கூறி பா.ஜனதா கவுன்சிலர்கள் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

எந்த பணியும் நடைபெறவில்லை என கூறி பா.ஜனதா கவுன்சிலர்கள் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் திருக்குறளும், அதற்கான விளக்கமும் வாசிக்கப்பட்டது.

குடிநீர் திட்டப்பணி

பின்னர் மேயர் மகேஷ் வாசித்த பட்ஜெட் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய திட்ட விவரங்கள் வருமாறு:-

2022-2023-ம் ஆண்டுக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் புத்தேரி குளம் அழகுபடுத்துதல் மற்றும் நகரை அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் மூலதனமானிய நிதியின் கீழ் 58.88 கி.மீ. நீளத்துக்கு ரூ.36.47 கோடியில் அரசு திட்டப்பணிகள் வாயிலாக சாலைப்பணிகள் செய்யப்பட்டு முடிவடையும் தருணத்தில் உள்ளது. வருகிற ஆண்டுக்குள் முழுமையான சாலை மேம்பாட்டு பணிகள் செய்திட விரிவான திட்ட அறிக்கை பெற்று அரசுக்கு அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பஸ் நிலையங்கள் நவீனமயம்

நாகர்கோவில் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைத்து வசதிகளும் பெற வேண்டி ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் ஆகியவை நவீனப்படுத்தி மேம்படுத்திட பணிகள் நடந்து வருகிறது. மாநகர பொது சுகாதார ஆய்வகம் கட்டப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் பாலமோர் ரோட்டில் ரூ..10.5 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து இவ்வாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேயரிடம் வாக்குவாதம்

பின்னர் கவுன்சிலர் உதயகுமார் பேசுகையில், மாநகராட்சியின் பட்ஜெட் அறிக்கையை முன்கூட்டியே கவுன்சிலர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும், அதன் மூலம் அதில் உள்ள விவரங்களை கவுன்சிலர்கள் படித்து அறிந்திருக்க முடியும் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் பட்ஜெட் விவர அறிக்கை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது நடைபெறும் கூட்டத்தில் தான் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பா.ஜனதா கவுன்சிலர்கள் மீனாதேவ், ரமேஷ், தினகரன், அய்யப்பன், வீரசூரப்பெருமாள், சுனில் குமார், ஆச்சியம்மான், ரோசிட்டா, ஆனோறோனைட் சினைடா ஆகிய 9 பேரும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்று கூறி மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால் சிறிது நேரம் கூச்சல்- குழப்பம் நிலவியது.

உள்ளிருப்பு போராட்டம்

பின்னர் பா.ஜனதா கவுன்சிலர்கள் மாநகராட்சியில் இதுவரை எந்த பணியும் நடைபெறாததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து கூட்டப் பொருள் அறிக்கையை மேயர் அமர்ந்திருந்த மேஜையில் வைத்தனர். பின்னர் அனைவரும் மேயர் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூட்டப் பொருட்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து மேயர் பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கவுன்சிலர்களிடம், உங்களது கோரிக்கைகளை எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்றால் முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை தெரிவிக்கவில்லை. உங்களது குறைகளை எங்களிடம் கூறுங்கள். அதனை நிவர்த்தி செய்ய நானும், ஆணையரும் செவி சாய்க்க தயாராக உள்ளோம் என்று மேயர் மகேஷ் கூறினார்.

ஆனால் கவுன்சிலர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூட்டம் முடிவடைந்ததாக அறிவித்துவிட்டு தனது அறைக்கு சென்றார். பா. ஜனதா கவுன்சிலர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்த பிறகு உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கவுன்சிலர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க. கவுன்சிலர் உதயகுமார், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, கோபால சுப்பிரமணியம், அக்‌ஷயா கண்ணன், அனிலா ஆகியோரும் கூட்ட அறையில் அமர்ந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணி முதல் ஆணையர் ஆனந்த் மோகன் தலைமையில் அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இரவு 8.10 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கவுன்சிலா்கள் கைவிட்டனர். உள்ளிருப்பு போராட்டத்தையொட்டி மாநகராட்சி அலுவலகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி நல அதிகாரி ஜான், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் டி.ஆர். செல்வம், நவீன் குமார், பால் தேவராஜ் அகியா, அருள்சபிதா ரெக்சலின், மேரி ஜெனட் விஜிலா, அனுஷா பிரைட், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story