பா.ஜ.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்; பெண்கள் உள்பட 140 பேர் கைது
சிதம்பரத்தில் இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 140 பேரை போலீசார் கைதுசெய்தனர்
சிதம்பரம்
ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தடையை மீறி ஏறிய இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். இதையடுத்து பா.ஜ.க. கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே.மருதை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிதம்பரம் மேலவீதி ராமர் கோவில் அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
140 பேர் கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் மருதை, துணை தலைவர் கோபிநாத் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.ஶ்ரீதரன், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநில துணை தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், விவசாய அணி மாநில துணை தலைவர் எஸ்.ஜி.எம்.ரமேஷ், பட்டியல் அணி மாநில துணை தலைவர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார், மாநில விவசாய அணி ரகுபதி, மாவட்ட செயலாளர் ஏழுமலை, நகர தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் சீனு சங்கர், மணிமாறன் மற்றும் 14 பெண்கள் உள்பட 140 பேரை கைது செய்து வடக்குரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.