சமய மாநாடு தடை விவகாரம்: அமைச்சர் மனோ தங்கராஜ் மீது போலீசில் பா.ஜனதா புகார்


சமய மாநாடு தடை விவகாரம்: அமைச்சர் மனோ தங்கராஜ் மீது போலீசில் பா.ஜனதா புகார்
x

சமய மாநாடுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது போலீஸ் நிலையத்தில் பா.ஜனதாவினர் புகார் கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சமய மாநாடுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது போலீஸ் நிலையத்தில் பா.ஜனதாவினர் புகார் கொடுத்துள்ளனர்.

பா.ஜனதாவினர் மனு

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் சமய மாநாடு நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜனதாவினர் நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அந்த வகையில் பா.ஜனதா கிழக்கு மண்டல தலைவர் ராஜன் தலைமையில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஜித், சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாரம்பரியமாக நடைபெறும் விழாக்கள் அனைத்திலும் அமைச்சர் மனோ தங்கராஜ் தலையிட்டு அதனை நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தற்போது மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கடந்த 85 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்து சமய மாநாட்டை அவர் தலையிட்டு நிறுத்தியுள்ளார்.

அமைச்சர் மீது நடவடிக்கை

கடந்த ஆண்டு குமாரகோவில் தேரோட்டத்தின் போது அமைச்சர் மனோ தங்கராஜ் விதிமுறையை மீறி செயல்பட்டார். வேணுகோபால் கமிஷன் பரிந்துரைக்கு எதிராக பல ஆண்டுகளாக அனுமதி கொடுக்கப்படாமல் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி வழங்கக்கோரி அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் கலவரம் உருவாக வாய்ப்புள்ளது. எனவே அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் இதற்கு துணை போகும் சிலர் மீதும் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜை கண்டித்து கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதாவினர் கண்டன கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story