திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பெயரில் ஆள் மாறாட்டம்


திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பெயரில் ஆள் மாறாட்டம்
x

திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பெயரில் ஆள் மாறாட்டம்

திருவாரூர்

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் நடந்த திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற வாலிபர் பிடிபட்டார்.

ஆள் மாறாட்டம்

திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த 5-ந்தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு இரு நாட்கள் நடந்து வருகிறது.

நேற்று மதியம் பி.ஏ. அரசியல் அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் சந்தேகத்தின் பேரில் தேர்வு எழுத வந்திருந்த ஒரு வாலிபருடைய ஹால் டிக்கெட்டை தேர்வு மைய அலுவலர் பரிசோதித்தார்.

அப்போது பாஸ்கர் என்பவர் பெயரில் ஆள் மாறாட்டமாக அவர் தேர்வு எழுதுவதற்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரி உடனே அந்த வாலிபரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினார்.

விசாரணை

மேலும் திருவாரூர் தாலுகா போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் கல்லூரிக்கு சென்று ஆள் மாறாட்டமாக தேர்வு எழுதிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகரன் என்பதும், உடற்கல்வி ஆசிரியருக்கான படிப்பை முடித்து பிரியாணி கடை வைத்து நடத்தி வருவதும், பி.ஏ. அரசியல் அறிவியல் தேர்வில் பாஸ்கருக்கு பதிலாக ஆள் மாறாட்டமாக அவர் தேர்வு எழுத முயன்றதும் தெரிய வந்தது.

மேலும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர் திருவாரூர் மாவட்டம் தோட்டச்சேரி பகுதியை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார், திவாகரன் மற்றும் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையத்தின் நிர்வாகியும், பா.ஜனதா கட்சி நிர்வாகியுமான ரமேஷ்குமார் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story