மத்திய அரசின் 8-வது ஆண்டு நிறைவு விழா: சேலத்தில் பா.ஜ.க. மகளிர் அணியினர் ஊர்வலம்


மத்திய அரசின் 8-வது ஆண்டு நிறைவு விழா:  சேலத்தில் பா.ஜ.க. மகளிர் அணியினர் ஊர்வலம்
x

மத்திய அரசின் 8-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சேலத்தில் பா.ஜ.க. மகளிர் அணியினர் ஊர்வலம் நடத்தினார்கள்.

சேலம்

சேலம்,

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சேலத்தில் அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா கட்சியினர் திரண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார், ஊர்வலமாக செல்லக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து போலீசார் அனுமதி அளித்தனர். பின்னர் பா.ஜ.க. மகளிர் அணி மாநகர் மாவட்ட தலைவி சுமதி தலைமையில் மகளிர் அணியினர் திருவள்ளுவர் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது, அவர்கள் இலவச சமையல் கியாஸ் திட்டம், சிறு வணிகர்களுக்கு கடன், செல்வமகள் சேமிப்பு திட்டம், வீடு கட்டுவதற்கு மானியம், பணிபுரியும் பெண்களுக்கு விடுதி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நளினி, மாவட்ட துணைத்தலைவர்கள் சுஜாதா, பூங்கொடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி, மாவட்ட பொறுப்பாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story