வருகிற நாடாளுமன்ற தேர்தலில்பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம்
அரசியல் ஜல்லிக்கட்டில் பின்வாசல் வழியாக வர பாசிச கட்சி முயற்சி செய்வதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் எனவும் புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நன்றி தெரிவிக்கும் கூட்டம்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தடையை நீக்கி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசின் வக்கீல்கள் மூலம் வாதாடி பெற்று தந்தமைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஜல்லிக்கட்டு பேரவைகளின் சாா்பில் புதுக்கோட்டையில் சிப்காட் அருகே நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு பேரவை நிறுவன தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கி பேசுகையில், ``ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடையாளமாக சென்னை மெரினா கடற்கரையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
அரசியலில் ஜல்லிக்கட்டு
கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டினை நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது. ஆனால் தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதற்கு நீங்கள் நடத்திய போராட்டம் தான் காரணம் என அனைவரும் அறிவார்கள். தமிழகத்தில் பாசிச கட்சி அரசியலில் ஜல்லிக்கட்டை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஆட்டத்தை கூட அவர்களால் நேர்மையாக ஆடமுடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர். ஜல்லிக்கட்டை பொறுத்தவரை வாடிவாசல் வழியாக தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சி புறவாசல் வழியாக தான் வருகின்றனர். அதனை தமிழக மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
மத்திய அரசின் அடக்குமுறை
தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக போராடியதற்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டுக்கான தடை விதிக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த போராட்டங்களை முறையாக கையாண்டதில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் நுழைய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க.வின் கிளை கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது.
மத்திய அரசின் அடக்குமுறையை கண்டு தி.மு.க. என்றும் பயந்தது கிடையாது. மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணி 25 சதவீதம் முடிவடைந்துள்ளது. அடுத்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்குள் ஸ்டேடியத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு அதிகமாக நடைபெறுகிறதில் புதுக்கோட்டையில் மினி ஸ்டேடியத்தில் வாடிவாசல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயப்படமாட்டோம்
எத்தனை மோடி,அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. பா.ஜ.க.வின் தொண்டர்படை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. தான். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அமலாக்கத்துறை 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது. இதில் 115 பேர் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள். இதேபோல தான் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மோடியிடம் நெருக்கமாக உள்ள அதானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், இ.டி.க்கும் பயப்படமாட்டோம். முதல்-அமைச்சர் சொல்கிற இடத்தில் கவா்னா் கையெழுத்திட வேண்டும், கவர்னர் மத்திய அரசின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அவ்வளவு தான். 21 கோப்புகளில் கவர்னர் கையெழுத்திடாமல் உள்ளார். இதில் முக்கியமான ஒன்று அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்வது தொடர்பானது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கைது செய்தார்களா?. கூட்டணி அமைத்ததால் எல்லாத்தையும் மறந்து விட்டார்கள்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில்...
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற 2017-ம் ஆண்டுக்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்டினீர்கள். ஜல்லிக்கட்டு நன்றி அறிவிப்பு கூட்ட நடைபெறுகிற இந்நேரத்தில் அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன், மூர்த்தி, பெரியகருப்பன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட மக்கள் பிரதிநிதிகள், தி.மு.க.வினர், ஜல்லிக்கட்டு பேரவையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை மாநில இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் வரவேற்று பேசினார். முடிவில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் நன்றி கூறினார். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல், ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவருமான உஷாசெல்வம், ஆலங்குடி பேரூராட்சி மன்ற தலைவர் ராசி முருகானந்தம், குழந்தை விநாயகர் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மங்களம்மெய்யர், மாஞ்சான் விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் கண்ணன், புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின், எஸ்.குளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதிராஜா, புதுக்கோட்ைட நகர தி.மு.க. செயலாளர் செந்தில், புதுக்கோட்டை நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.