எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ.க.பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது-கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தேர்தலில் எதிர்க்கட்சிகளை சந்திக்க பயந்து பொய்வழக்கு போட்டு பா.ஜ.க.எதிர்்கட்சிகளை மிரட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
காவேரிப்பாக்கம்
தேர்தலில் எதிர்க்கட்சிகளை சந்திக்க பயந்து பொய்வழக்கு போட்டு பா.ஜ.க.எதிர்்கட்சிகளை மிரட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
கொடியேற்றம்
காவேரிப்பாக்கத்தை அடுத்த மாமண்டூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். முனிரத்னம், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து கொடியேற்றி பேசியதாவது:-
இந்தியாவில் ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதில் பா.ஜ.க.தீவிரம் காட்டிவருகிறது. எதிர்கட்சியினரை தேர்தலில் எதிர்கொள்ள பயந்து பொய்வழக்குகளை போட்டு மிரட்டுகின்றனர்.
பிரிக்கும் வேலை
சாதி, மதம் ஆகியவற்றால் ஒன்றிணைந்து உள்ள மக்களை பிரிக்கும் வேலையை பா.ஜ.க. செய்கிறது. தற்போது இந்தியா கடுமையான நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் அருண்குமார், மாமண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா பிரகாஷ், வர்த்தகர் அணி வி.எல்.சி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து பொன்னப்பந்தாங்கல் பகுதியிலும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.






