கோவை சம்பவத்தை பா.ஜனதா அரசியலாக்க முயற்சி செய்கிறது
காரில் வெடித்தது வெடிகுண்டு அல்ல என்றும், இந்த சம்பவத்தை பா.ஜனதா அரசியலாக்க முயற்சி செய்கிறது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
கோவை
காரில் வெடித்தது வெடிகுண்டு அல்ல என்றும், இந்த சம்பவத்தை பா.ஜனதா அரசியலாக்க முயற்சி செய்கிறது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
ஆய்வுக்கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று காலையில் நடந்தது.
இதில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேயர் கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் கடந்த 23-ந் தேதி அதிகாலையில் காரில் சிலிண்டர் வெடித்ததும் தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுத்தி னார்கள்.
இதனால் 12 மணி நேரத்தில் அந்த காரின் உரிமையா ளர், உயிரிழந்தவர் விவரம் சேகரிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட னர். அன்று மாலையிலேயே அங்கு கடைகள் திறக்கப்பட்டு தீபாவளி விற்பனை நடந்தது.
என்.ஐ.ஏ. விசாரணை
தற்போது அந்த பகுதியில் எவ்வித அச்சமும் இல்லை. இந்த சம்பவத்தில் தமிழகம் மட்டுமல்ல, வேறு மாநிலங்கள், சர்வதேச அளவில்கூட தொடர்பு வைத்து இருக்கலாம். அதை உறுதிப்படுத்தி, தவறு செய்தவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு காவல்துறை கைது செய்து உள்ளது.
கைதானவர்கள் யாரிடம் எல்லாம் தொடர்பு வைத்து உள்ளனர் என்பது தொடர்பாக மாநிலம் கடந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். ஆனால் சிலர் நாங்கள் சொல்லிதான் மாற்றி உள்ளனர் என்று நினைத்து வருகிறார்கள்.
அரசியலாக்க முயற்சி
மதுரையில் நடந்த ராணுவ வீரரின் உயிரிழப்பு சம்பவத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்க முயன்றார். தற்போது அவர்கள் கோவையில் நடந்த சம்பவத்தை அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள். விசாரணையில் குற்றவாளி யை அடையாளம் கண்ட பின்னர்தான் காவல்துறை அந்த தகவலை வெளியிடுவார்கள்.
ஆனால் அதற்கு முன்பாகவே பா.ஜனதா மாநில தலைவர் குறுகிய மனப்பான்மையோடு கைதானவர்கள், கைப்பற்றப்பட்டது தொடர்பான தகவலை வெளியிட்டு உள்ளார். அந்த தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது? அதை கொடுத்தது யார்? அவர் இதில் உடந்தையாக இருக்கிறாரா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முதலில் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும்.
கடும் நடவடிக்கை
கோவையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. 40 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் நடந்த சம் பவத்தில் காரில் சிலிண்டர் தனியாக இருந்தது, வெடி மருந்துகள், ஆணிகள் இருந்தன. ஆனால் வெடிகுண்டாக உருவாக்கி அதை கொண்டு வந்து வெடிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்க சொன்னாலோ, அல்லது மிரட்டினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. வெற்றி
தமிழகத்தில் மிகத்திறமையான, வெளிப்படையான ஆட்சியை முதல்-அமைச்சர் செய்து வருகிறார். 1998-ம் ஆண்டு நடந்த சம்பவத்தையும், தற்போது நடந்த சம்பவத்தையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் முயற்சி எடுபடாது.
தமிழகத்தில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்று விடும். அதை ஏற்க முடியாமல் தான் இதுபோன்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். எனவே சமூக வலைத்தளத்தில் வீண் வதந்தியோ, உண்மைக்கு புறம்பான தகவலையோ வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.