மோட்டார் சைக்கிள் மோதி பா.ஜனதா பிரமுகர் படுகாயம்
கழுகுமலையில் மோட்டார் சைக்கிள் மோதி பா.ஜனதா பிரமுகர் படுகாயம் அடைந்தார்.
கழுகுமலை:
கழுகுமலை ஆறுமுகம்நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் மேற்பார்வையாளராகவும், கழுகுமலை பகுதி பா.ஜ.க. கிளை செயலாளராகவும் உள்ளார். நேற்று முன்தினம் இரவில் வேலையை முடித்துவிட்டு பஸ்சில் ஊருக்கு வந்தார். கழுகுமலை பஸ்நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஆறுமுகம் நகர் பூங்கா அருகே வரும்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் கழுகுமலை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த அன்னராஜ் மகன் ஆண்ட்ரூஸ் (26) என்பவர் வந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பெரியசாமி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.