சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரத போராட்டம்
சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் சசிக்குமார் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சேலம் மாநகராட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. மத்திய அரசு நிதியில் இருந்து தான் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. கல்விக்கூடங்கள், கோவில்களில் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகம் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலைவாழ் இனத்தை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காதது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி தற்போது நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
குறைக்க வேண்டும்
போராட்டத்தில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000-ம் வழங்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் நடைபெறும் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதம் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார். உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.