பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 61 பேர் கைது
கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 61 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி (கிழக்கு):
சென்னை பனையூரில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றிய காவல் துறையைக் கண்டித்தும், மேலும் கொடிக்கம்பத்தை அகற்ற பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தை சேதப்படுத்தியதாக பா.ஜனதா கட்சியினரை கைது செய்ததை கண்டித்தும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பா.ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க. வடக்கு மாவட்ட அலுவலகத்தில் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்த பா.ஜ.க.வினர் தங்கள் வாகனங்களில் கட்சி அலுவலகத்தில் இருந்து பயணியர் விடுதி நோக்கி சென்றனர். அங்கு மாவட்ட தலைவர் தலைமையில் நகர தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 2 பெண்கள் உள்பட 61 பேரை கைது செய்தனர்.