எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.யை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல்
தஞ்சையில் நடந்த அம்ரித் பாரத் நிலைய திட்ட தொடக்கவிழாவில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி.யை கண்டித்து வெளிநடப்பு செய்த பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சையில் நடந்த அம்ரித் பாரத் நிலைய திட்ட தொடக்கவிழாவில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி.யை கண்டித்து வெளிநடப்பு செய்த பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
எதிர்ப்பு
இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்களில் அம்ரித் பாரத் நிலைய திட்ட தொடக்கவிழா நேற்றுகாலை நடந்தது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.21.17 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதையொட்டி தஞ்சை ரெயில் நிலையத்தில் நடந்த தொடக்கவிழாவில் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. பேசினார். அப்போது அவர், ஒன்றிய பிரதமர் என கூறினார். இதற்கு பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி வாழ்க என கோஷம் எழுப்பியதுடன் மத்திய அரசு என்று கூற வேண்டும் என வலியுறுத்தினர்.
புறக்கணிப்பு
இதனால் கூட்டத்தில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். இதனால் பா.ஜனதா கட்சியினர் இருக்கையில் அமர்ந்தனர். பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசினார். அப்போது அவர், தஞ்சைக்கு என சில கண்ணியம் உள்ளது. இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என பா.ஜனதா கட்சியினரை கண்டித்து பேசினார்.
மேலும் அவர்(எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.), கடந்த 10 ஆண்டுகளில் மத்தியஅரசு தஞ்சை தொகுதிக்கு என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பினார். இதனால் விழாவில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி.யை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியும் கோஷம் எழுப்பியபடி விழாவை புறக்கணித்துவிட்டு வெளியேறினர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள் தஞ்சை ரெயில் நிலையம் அருகே மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கருப்பு முருகானந்தம் உள்பட பா.ஜனதா கட்சியை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.
முன்னதாக பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்தியஅரசு பல திட்டங்களை இந்த தொகுதியில் அமல்படுத்தி உள்ளது. ஆனால் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதை கண்டித்து தான் நாங்கள் விழாவை புறக்கணித்தோம். மேலும் எங்களை மிரட்டும் வகையில் பேசியதால் அவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம் என கூறினார்.
பாதுகாப்பு பணி
பா.ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்ட பிறகு தி.மு.க.வை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கட்சி கொடிகளை கையில் ஏந்தியபடி தஞ்சை ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க என கோஷம் எழுப்பியபடி இருந்தனர். சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.








