பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் யார்?
கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை
கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்ம நபர் புகுந்தார்
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் கடந்த 12-ந்தேதி மாலை மர்ம நபர் ஒருவர் புகுந்து கதவை அடைக்க முயன்றார். இதனை அங்கு பணியில் இருந்த ஊழியர் பார்த்து அவரை பிடித்து வெளியே தள்ளினார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலக ஊழியர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர்.
இதற்கிடையே இரவில் அவினாசி சாலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த நபர் என்று தெரியவந்தது. இதைத்தொடரந்துஅவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
யார் அவர்?
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த மர்ம நபர் எப்படி இறந்தார்? என்பதை அறிய அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர், கோவை-அவினாசி ரோடு அருங்காட்சியகம் அருகே செல்லும்போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது.
ஆனால் இதுவரை இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் பஸ்சில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? எம்.எல்.ஏ அலுவலகத்தில் புகுந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவல் தெரிவிக்க தாமதம்
மர்ம நபர் பஸ் முன்பாய்ந்து மாலை 6 மணியஅளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அந்த வழியாக சென்றவர்கள் யாரும் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. காயத்துடன் இறந்து கிடந்தவரை சாலை ஓரம் தூக்கிப்போட்டுவிட்டு சர்வ சாதாரணமாக பொதுமக்கள் இந்த பகுதியை கடந்து சென்றுள்ளனர். இரவு 10 மணிக்குதான் போலீசுக்கு தகவல் தெரிந்து உடலை மீட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் யாரேனும் காயத்துடன் இறந்து கிடந்தாலோ, மயக்கநிலையில் கிடந்தாலோ 108 ஆம்புலன்சுக்கோ, போலீசுக்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்