அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது
அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது என்று கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது என்று கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.
8-வது ஆண்டு கொண்டாட்டம்
கோவை மசக்காளிப்பாளையத்தில் பா.ஜ.க.வின் 8-வது ஆண்டுகள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராஜா முன்னிலைவகித்தார். நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் இணை மந்திரி முரளிதரன் கலந்துகொண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்து கோவை திரும்பிய மருத்துவ மாணவர்களை சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
ஊழல் இல்லாத ஆட்சி
ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவதை பா.ஜ.க. இலக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் கேரளா மற்றும் தமிழகத்தில் அப்படி இல்லை. கேரளா முதல்-மந்திரி தங்கம் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் உள்ள தி.மு.க.-காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கேரள முதல்-மந்திரி மீதான கடத்தல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு ஊழல் செய்வதில் கேரளாவுடன் போட்டி போடுகிறது. மத்திய அரசிடம் பூஜ்ஜியம் அளவில் கூட ஊழல் இல்லை. இதனால் தான் பா.ஜ.க. ஆட்சியின் 8-ம் ஆண்டை கொண்டாடி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கைது நடவடிக்கை
பா.ஜ.க.வின் 8 ஆண்டுகள் ஆட்சியை மத்திய அரசின் மூலமாக பயனடைந்த பயனாளிகளுடன் கொண்டாடி வருகிறோம். டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி., தலைவர்கள் நடத்துகின்றனர்.
டெல்லியில் மக்களுக்கு இடையூறு செய்வது போன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதல்-அமைச்சரை எதிர்த்து பதிவிட்டால் கைது நடவடிக்கை பாய்கிறது. காவல்துறை ஏவல்துறையாக உள்ளது.
பா.ஜ.க.தலையிடாது
மேலும் அடுத்த 1½ ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க உள்ளது. தமிழக காவல்துறை பணிக்கு ஆள் சேர்ப்பதில் அக்னிவீரர் பாணியை கொண்டுவர வேண்டும். அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது. அ.தி.மு.க. பெரிய கட்சியாக, வலுவான கட்சியாக தமிழகத்தில்உள்ளது. மேலும் சீரடிக்கு செல்லும் வழக்கமான ரெயில் சேவை ஏதும் நிறுத்தப்படவில்லை. தற்போது தனியார் ரெயில் சேவையை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இது தொடர்பாக டி.ஆர்.பாலு சொல்லும் குற்றச்சாட்டு தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.