வேளிமலை முருகன் கோவிலில் பரபரப்பு: அமைச்சர் மனோதங்கராஜ் தேரோட்டத்தை தொடங்கிவைக்க பா.ஜனதா எதிர்ப்பு


வேளிமலை முருகன் கோவிலில் பரபரப்பு: அமைச்சர் மனோதங்கராஜ் தேரோட்டத்தை தொடங்கிவைக்க பா.ஜனதா எதிர்ப்பு
x

வேளிமலை முருகன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை,

வேளிமலை முருகன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேரோட்டம்

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் முருகப்பெருமான் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர் திருவிழா நடந்தது. விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பா.ஜனதாவினர் திரண்டனர்

இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்று நடந்த தேர் திருவிழாவில் அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்க நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் குமரி போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன், பயிற்சி கூடுதல் சூப்பிரண்டு விவேகானந்த் சுக்லா மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் காலை 8 மணிக்கு விநாயகர் மற்றும் முருகன், வள்ளி தேவி கோவிலில் இருந்து எழுந்தருளினர். கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்த பிறகு 8.10 மணிக்கு வெளியே வந்த சாமிகளை போலீஸ் பாதுகாப்புடன் தேர் பீடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் ரமேஷ், பொருளாளர் முத்துராமன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் மற்றும் ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டிருந்தனர்.

அமைச்சருக்கு எதிர்ப்பு

இதற்கிடையே தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதற்காக தகவல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

உடனே பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினர் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

இந்த பதற்றத்திற்கு இடையே காலை 8.23 மணிக்கு முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகப்பெருமானும், வள்ளிதேவியும் எழுந்தருளினர். பின்னர் பா.ஜனதா எதிர்ப்புக்கு இடையே அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது இந்து அமைப்பினர் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு தி.மு.க.வினர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கைது

இந்தநிலையில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த பா.ஜனதாவினரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்திய பிறகு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காலை 9.10 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைந்தது. முன்னதாக தேர் கிளம்பி கோவில் நடை பகுதியில் சென்ற போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜ.க. துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் உண்ணி கிருஷ்ணன், பொருளாளர் முத்துராமன், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் முத்துராமன் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி தென்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

தேேராட்ட நிகழ்ச்சியில் தேவசம் போர்டு தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் சுதர்சன குமார், மராமத்து என்ஜினீயர் அய்யப்பன், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன், துணைத்தலைவர் மணி, கவுன்சிலர் ஸ்ரீதேவி, பா.ஜ.க. நகர தலைவர் நாகராஜன், முன்னாள் இளைஞரணி மாவட்ட தலைவர் ராமதாஸ், அரசு வக்கீல் ஜெகதேவ், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், திருவிழாக்குழு புரவலர் பிரசாத், தலைவர் சுனில்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story