அண்ணாமலை வரவேற்பு பதாகையை அகற்ற பா.ஜனதாவினர் எதிர்ப்பு


அண்ணாமலை வரவேற்பு பதாகையை அகற்ற பா.ஜனதாவினர் எதிர்ப்பு
x

புதுக்கோட்டையில் அண்ணாமலை வரவேற்பு பதாகையை அகற்ற பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

வரவேற்பு பதாகை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டைக்கு வருகிற 18-ந் தேதி வருகை தருகிறார். இதையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்கும் விதமாக பா.ஜனதாவினர் வரவேற்பு பதாகை வைத்துள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அகற்றுதல், சுவர் விளம்பரங்களை அழித்தல் போன்ற பணியை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு இடத்தில் பா.ஜனதாவினரின் பதாகையை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பதாகையை அகற்ற நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு சென்றனர். அப்போது அந்த பதாகையை அகற்ற பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் உள்ள பதாகையை வேண்டுமென அகற்றுவதாக குற்றம்சாட்டினர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் மாதத்தில் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 2-வது சனிக்கிழமையான இன்று (அதாவது நேற்று) நகரை தூய்மையாக வைத்துக்கொள்ளும் வகையில் தூய்மை பணி மேற்கொள்ளப்படுவதாக கூறினர். ஆனால் இதனை ஏற்க பா.ஜனதாவினர் மறுத்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்த பதாகையை தாங்களாகவே அகற்றிக்கொள்வதாக பா.ஜனதாவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து பா.ஜனதாவினர் மற்றும் அதிகாரிகள், போலீசார் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story