பா.ஜ.க. சார்பில் மாமல்லபுரத்தில் யோகா தின விழா -அண்ணாமலை பங்கேற்பு


பா.ஜ.க. சார்பில் மாமல்லபுரத்தில் யோகா தின விழா -அண்ணாமலை பங்கேற்பு
x

மாமல்லபுரத்தில் பா.ஜ.க. சார்பில் யோகா தினவிழா நடந்தது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகாசனம் செய்தார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகனராஜா தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னிலை வகித்தார்.

மாமல்லபுரம் நகர செயலாளர் தணிகைவேல் வரவேற்றார். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஆட்டோ, கார் டிரைவர்கள், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களுடன் பங்கேற்று தடாசனம், ஹலாசனம், சிரசாசனம், வீரபத்ராசனம், ஏகபாதாசனம், சக்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் யோகாசனம் செய்து அசத்தினார்.

ஜெயிக்க முடியாத சூழல்

யோகா செய்வதால் உடலும், மனமும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதற்கு உண்டான திறவுகோல் எனவும் யோகாசன பயிற்சியாளர் சுரேஷ்பாபு பயிற்சி அளித்து அறிவுறுத்தினார்.

பின்னர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி எந்தவித சூழ்நிலையிலும் ஜெயிக்க முடியாத சூழல் உள்ளது. அதை மறைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசி மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருகிறார். நேற்று திருவாரூரில் நடந்த கூட்டமே அதற்கு சாட்சி. முதலில் ஜனாதிபதி வருவதாக சொன்னார்கள். அவர் ஏதோ காரணத்திற்காக வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகளை இணைத்து கொண்டிருக்கும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருவதாக சொன்னார். அவரும் வரவில்லை. கடைசியாக கருணாநிதியின் பேரன் வயதில் இருக்க கூடிய பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்வை வரவழைத்து கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்துள்ளார்.

400 எம்.பி.க்களை பெற்று

அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பது நிதிஷ்குமார் வராததில் இருந்தே நமக்கு தெரிகிறது. எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது அவர்களின் கனவாக மட்டுமே இருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.வை பெரிய அளவில் மக்கள் விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். 3-வது முறையாக 400 எம்.பி.க்களை பெற்று மோடி பிரதமராக வருவார். தமிழகத்தில் 39-க்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமக்கு கிடைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story