"பா.ஜனதாவின் கொள்கைகள் திராவிட மண்ணில் ஊடுருவ முடியாது" - வைகோ
“பா.ஜனதாவின் கொள்கைகள் திராவிட மண்ணில் ஊடுருவ முடியாது” என்று வைகோ கூறினார்.
நெல்லையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய உபகண்டத்தில் பல்வேறு மத, மொழி, தேசிய இணை அடையாளங்கள் உள்ளன. இவை அனைத்தையும் புல்டோசர் கொண்டு நொறுக்கிவிட்டு இந்துத்துவா கொள்கையை மட்டும் நிலைநாட்ட வேண்டும் என்று பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் முயன்று வருகிறது. இதுபோன்ற நிலை ஏற்பட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு சிதைந்து விடும்.
மத ஒற்றுமைக்கு ஆபத்தாக பிரதமர் நரேந்திரமோடி அரசு இயங்குகிறது. இதனை எதிர்த்து போராடும் பெரும் சக்தியாக தமிழகம் திகழ்கிறது. திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநாட்டும் மற்றும் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்து சமத்துவத்தை நிலைநாட்டும் முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் திராவிட மாடல் ஒற்றுமை கோட்பாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் நிலை ஏற்பட்டே தீரும். தமிழகத்தில் பா.ஜனதா ஒருபோதும் கால் ஊன்ற முடியாது. 2024-ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இதே கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். பா.ஜனதாவின் கொள்கைகள் திராவிட இயக்க மண்ணில் ஊடுருவ முடியாது.
சேது சமுத்திர திட்டம் தேவை என்பதை அன்றே பேரறிஞர் அண்ணா சொன்னார். நானும் அதற்காக பலகட்ட போராட்டம் நடத்தி இருக்கிறேன். தென்னாட்டு வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கும் சேது சமுத்திர திட்டம் வழிவகை செய்யும். எனவே அது மிகவும் அவசியம்.
செண்பகவல்லி அணை கால்வாய் உடைப்பை சீரமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நான் பலமுறை கேரள முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். அந்த அணை மூலம் தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் விவசாயம் செழிக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம், மின்னல் முகமது அலி, முன்னாள் கவுன்சிலர் டேனியல் ஆபிரகாம், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்பட பலர் உடன் இருந்தனர்.