சனாதனத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
சனாதனத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று மாலை விழுப்புரம் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
104 பேர் கைது
உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு 36 பெண்கள் உள்பட 104 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கைதான அவர்கள் அனைவரும் இரவு 8.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள், மண்டபத்தின் அருகிலேயே சாலையில் திரண்டு வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட தங்களுக்கு குடிநீர், உணவு ஆகியவற்றை காவல்துறையினர் வழங்கவில்லை என்றுகூறி கோஷம் எழுப்பினர். மேலும் பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசாரிடமும் அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.