பா.ஜ.க. தொண்டர்கள் கைதை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் -அண்ணாமலை அறிவிப்பு


பா.ஜ.க. தொண்டர்கள் கைதை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் -அண்ணாமலை அறிவிப்பு
x

ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, 26-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. ஆட்சியில் தமிழரின் மாண்பையும், தமிழரின் மரபையும், தமிழரின் தொன்மையையும், இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்துக்கு கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வருகிற 26-ந் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழ் இனத்தை, தமிழ் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்தும் ஆ.ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜ.க.வின் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள்.

கண்டனம்

தூத்துக்குடி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, வேலூர், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, சென்னை என்று தொடங்கிய கைது நடவடிக்கை பரவலாக தமிழகம் முழுவதும் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். தி.மு.க.வின் அராஜகமும், ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும் கண்டிக்கத்தக்கது. இந்த போலி வழக்கும், கைது நடவடிக்கையும் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

தவறை யார் செய்தாலும் தட்டிக்கேட்க பா.ஜ.க. தயங்காது. தமிழின தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மேல் பொய் வழக்கு போட்டு கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்? காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தாய்குலத்தை பழித்த, தமிழ் சகோதரிகளை பிறப்பு சொல்லி இழிவு செய்த ஆ.ராசாவின் அவலத்துக்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை நடத்துவோம். தன்மானம் மிக்க தமிழ் சகோதரிகளே கோவையை நோக்கி திரண்டு வாருங்கள்; தாய்மார்களே திரண்டு வாருங்கள். மாபெரும் அறவழி போராட்டத்தை வருகிற 26-ந் தேதி நடத்துவோம். ஆளும் கட்சியின் அநீதிக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story