குமரியில் 10 இடங்களில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
மோதலில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்யக்கோரி நேற்று குமரியில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்த்தாண்டம்:
மோதலில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்யக்கோரி நேற்று குமரியில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 இடங்களில் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடந்த 3-ந் தேதி பா.ஜனதா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பா.ஜனதாவினரும், காங்கிரசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 3 பேரையும், காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பாஜனதா கட்சி அலுவலகத்தை தாக்கிய காங்கிரசாரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் நேற்று மாலை பா.ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில், மயிலாடி, துவரங்காடு, திங்கள்சந்தை, ராஜாக்கமங்கலம், தக்கலை, மார்த்தாண்டம், புதுக்கடை சந்திப்பு, குலசேகரம், மேல்புறம் சந்திப்பு ஆகிய 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தக்கலை
தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் நகர பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் குமாரதாஸ் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாகராஜன், நகராட்சி துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை தாக்க வந்தவர்களை தடுக்க முயன்ற போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதில் தாக்க வந்த காங்கிரசார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தாக்குதலை தடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதற்கு முன்பு இது போல் 1993-ல் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் தாக்கப்பட்ட போது உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆகவே பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
எதிர்வினை உண்டு
ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவில்லை என கூறும் காவல்துறை, தாக்குதல் நடத்த வந்தது எங்களுக்கு தெரியாது என கூறுகிறார்கள், ஒருவேளை அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை தாக்கியிருந்தாலும் இப்படி தான் கூறியிருப்பார்களா?
பா.ஜ.க. ஏதோ பொறுமையாக இருக்கிறது என கருதி விட வேண்டாம். இது போன்ற நடவடிக்கைகளால் மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு தி.மு.க.வும், காங்கிரசும் மட்டுமல்ல போலீசும் பொறுப்பேற்க வேண்டும். எல்லா வினைகளுக்கும் எதிர்வினை உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே பா.ஜ.க. தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து விட்டு அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொண்டு நியாயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், ஒன்றிய தலைவர்கள் பத்மநாபன், இந்திரகுமார் மற்றும் நிர்வாகி கெ.சி.ராமதாஸ், தொழில் பிரிவு மணி, விவசாய பிரிவு முருகராஜன், வக்கீல் வேலுதாஸ், கவுன்சிலர்கள் ஷீபா, கீதா, ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம்
கிள்ளியூர் ஒன்றிய பா.ஜனதா சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பா.ஜனதா வக்கீல் பிரிவு தலைவர் சஜு தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், மாநில விவசாய பிரிவு தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் துரைசிங், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜு, ரெத்தினமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து இயங்கும் பஸ் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
மேல்புறம்-திங்கள்சந்தை
மேல்புறம் சந்திப்பில் மேல்புறம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மாவட்ட துணைத் தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அருண்குமார், மேல்புறம் கிழக்கு ஒன்றிய தலைவர் சேகர், மேற்கு ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திங்கள்சந்தை காமராஜர் பஸ் நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மனோகரகுமார் தலைமை தாங்கினார்.
கலை கலாசார பிரிவு மாவட்ட தலைவர் ஜெயசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொன். ரெத்தினமணி, முத்துகிருஷ்ணன், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
புதுக்கடை
புதுக்கடை பஸ்நிலையம் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
முன்சிறை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தலைவர்கள் குமார், விஜில், கொல்லங்கோடு மண்டல தலைவர் கிரி, முன்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, பைங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் விஜயராணி, புதுக்கடை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜாக்லின்ரோஸ் கலா, விளாத்துறை கிராம பஞ்சாயத்து தலைவர் ஓமனா, முன்சிறை பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பிரபுசலா, மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர் குமரேசதாஸ், புதுக்கடை முன்னாள் பேரூராட்சி தலைவர் மோகனகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
குலசேகரம்
காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜனதா சார்பில் குலசேகரத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். இதில் திருவட்டார் கிழக்கு ஒன்றியத் தலைவர் ராஜகுமார், மேற்கு ஒன்றியத் தலைவர் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர் ஷீபா பிரசாத், காளிமலை சேவா சமிதி நிர்வாகி சுஜித்குமார், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.