ஆ.ராசா உருவபொம்மையை எரித்து பா.ஜ.க.வினர் மறியல்; 32 பேர் கைது


ஆ.ராசா உருவபொம்மையை எரித்து பா.ஜ.க.வினர் மறியல்; 32 பேர் கைது
x

ஆ.ராசா உருவபொம்மையை எரித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்

சனாதன தர்மம் குறித்து இழிவாக பேசியதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும், பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை முற்றுகையிட வந்த பா.ஜ.க.வை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்தனர். இதையடுத்து அந்த கட்சியினரை கைது செய்த போலீசாரை கண்டித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினர் பெரம்பலூர் காமராஜர் வளைவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மறியல்

அப்போது அவர்கள் திடீரென்று ஆ.ராசா எம்.பி. உருவபொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும், அமைச்சர் சேகர் பாபுவின் உருவப்படத்தை எரித்தும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார், எரிந்து கொண்டிருந்த உருவபொம்மை மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சோ்ந்த 2 பெண்கள் உள்பட 32 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story