நெல்லையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜனதா பெண் தலைவர்கள் குறித்து தி.மு.க. நிர்வாகி அவதூறாக பேசியதை கண்டித்து சென்னையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டையில் பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் அங்கு மறியல் செய்யப்போவதாக தெரிவித்தனர். இதையொட்டி அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பா.ஜனதா நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து பேரணியாக சென்று பாலத்தின் அடியில் நின்று கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுரேஷ், வேல்ஆறுமுகம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.