ராமநாதபுரத்தில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்ககோரி ராமநாதபுரத்தில் பா.ஜ.க. விவசாய அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தில் முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணியின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் வரவேற்று பேசினார். விவசாய அணி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பருவமழை பொய்த்து போனதால் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதை விளக்கி சிறப்புரையாற்றினார்.
இதில் பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன், மாவட்ட பொது செயலாளர் ஆத்மா கார்த்திக், விவசாயஅணி மாவட்ட பொது செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட பொது செயலாளர் மணிமாறன், மாவட்ட துணை தலைவர்கள் செந்தில்குமார், மாடசாமி கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.