அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து சென்னையில், அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்-ஊர்வலத்தில் ஈடுபட்டனர். மேலும் பா.ஜ.க.வினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அமைச்சர் உதயநிதியை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளரும், துணை தலைவருமான கரு.நாகராஜன் முன்னிலை வகித்தார். இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி, உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்து முன்னணி மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்துத்துவம்தான் சனாதனமா?
ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். அதனை அருகில் அமர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்த்து ரசிக்கிறார். உலகம் முழுவதும் இதற்கு கண்டனம் எழுந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு இப்போது 'பல்டி' அடித்திருக்கிறார்கள். மதங்களுக்கு முன்பே தோன்றிய சனாதனம், எல்லா காலத்திலும் நிலைக்கும் தர்மம் ஆகும்.
தி.மு.க.வினர் பேசுவது போல இந்துத்துவம்தான் சனாதனம் என்றால், இந்தியாவில் கிறிஸ்தவமும், இஸ்லாமியமும் காலூன்றியிருக்க முடியுமா?. சனாதனத்தை எதிர்க்கவே திராவிட இயக்கங்களும் தோன்றியதாக தி.மு.க.வினர் வெட்டி பொய்களை சொல்லி வருகிறார்கள்.
நான் ஒரு சவால் விடுகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்லி தி.மு.க. தேர்தல் களம் காணமுடியுமா? சனாதனம் மதங்களை பிரிக்க சொல்லி தரவில்லை. தி.மு.க. வந்தபிறகுதான் சாதி அரசியலே தமிழகத்தில் காலூன்றியது.
தெய்வம் நின்று கொல்லும்
இந்து மதத்தை இழிவுபடுத்திய தி.மு.க.வுக்கு ஆட்சியில் இடமில்லை என்ற நிலை வரும். ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் தி.மு.க. நிச்சயம் அதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வரும். தெய்வம் நின்று கொல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க.வினருக்கு தகுதி இருக்கிறதா?
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். டேங்க் பண்ட் சாலை சந்திப்பு அருகே தடுப்புகள் அமைத்து போலீசார் காத்திருந்தனர்.
ஊர்வலமாக வரும் பா.ஜ.க.வினரை போலீசார் மறிக்க தயாரான போது, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சனாதனம் குறித்து எப்படி தி.மு.க.வினர் விமர்சித்து பேசலாம்? சமூகநீதி என்று பேசும் தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட, பட்டியலின நபர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? பதவிகளில் அமர்த்தப்படுகிறார்களா? இவர்களுக்கு சனாதனம் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? என்று அண்ணாமலை தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை முழுவதும் பா.ஜ.க.வினர் அமர்ந்திருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் எழும்பூர், மவுண்ட் ரோடு, தியாகராயநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டனர்.
பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள், அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவே போராட்டம் அத்துடன் கைவிடப்பட்டதாக அண்ணாமலை அறிவித்தார். பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பா.ஜ.க.வினர் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை உள்பட ஆயிரம் பேர் மீது வழக்கு
போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக அண்ணாமலை உள்ளிட்ட ஆயிரம் பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எச்.ராஜா கைது
இதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி திருவானைக்காவலில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட முயன்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் மூத்தத்தலைவர் எச்.ராஜா உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டியில் பா.ஜ.க.வினர் 232 பேரும், தஞ்சையில் 75-க்கு மேற்பட்டோரும், நாகையில் 85 பேரும், திருவாரூரில் 125 பேரும் கைது செய்யப்பட்டனர்.