மாற்று மதத்தினர் கோவில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பா.ஜனதா எதிர்ப்பு;எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 590 பேர் கைது


மாற்று மதத்தினர் கோவில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பா.ஜனதா எதிர்ப்பு;எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 590 பேர் கைது
x

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த மாற்று மதத்தினர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்த எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 590 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த மாற்று மதத்தினர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்த எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 590 பேரை போலீசார் கைது செய்தனர்.

பவுர்ணமி திருவிளக்கு பூஜை

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் மாதம்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 12 கோவில்களில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை தொடக்க விழா நடந்தது. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதேபோல் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டார். பின்னர் தங்கத்தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் திருக்கோவில் நிர்வாக மண்டல துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் செல்வி, மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார் உள்பட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ராபர்ட் கிளாரன்ஸ், ஜெயசந்திரன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மாற்று மதத்தினருக்கு எதிர்ப்பு

முன்னதாக திருவிளக்கு பூஜையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அறநிலையத்துறை கோவில் ஆகம விதிமுறைகளை மீறியும், இந்து ஆச்சாரங்களுக்கு முரணாக மாற்று மதத்தினரை கோவில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மண்டைக்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து பா.ஜ.க.வினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் முன்கூட்டியே போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் லட்சுமிபுரம் சந்திப்பு, மண்டைக்காடு சந்திப்புகளில் பேரி கார்டுகள் வைத்து தடுப்பு வேலி அமைத்தனர். இதனை மீறி மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி மற்றும் இந்து சேவா சங்க நிர்வாகிகள் ரெத்ன பாண்டியன், பத்மநாபன் மற்றும் இந்து அமைப்பினர் பலர் கோவில் முன்பு திரண்டனர்.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கைது

உடனே போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு அவர்கள் பூஜை வழிபாட்டை தொடங்கி வைக்க மாற்று மதத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது, திருவிளக்கு வழிபாட்டிற்கு வந்துள்ள ஆண்களை வெளியேற்ற வேண்டும் என போலீசாரிடம் கூறினர். பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மண்டைக்காடு போராட்டத்திற்கு வரும் வழியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் அனிஷா தேவி, மாவட்ட கலைப் பிரிவு தலைவர் நாஞ்சில் ஜெய சேகர், திங்கள் நகர் வார்டு உறுப்பினர்களான சரவணன், முத்துக்குமார் மாவட்ட மகளிரணி தலைவி அமலா நேசபாய் உள்பட 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நாகர்கோவிலில் டெரிக் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நாகர்கோவிலில் இருந்து கார் மூலமாக மண்டைக்காடு நோக்கி புறப்பட்டார். அவரை டெரிக் சந்திப்பில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதே போல மாவட்ட பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் மாநகரில் மட்டும் மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

தக்கலை

மண்டைக்காடு கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தக்கலை பெருமாள் கோவிலில் இருந்து பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் தலைமையில் பா.ஜனதாவினர் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

தக்கலை போலீஸ் நிலையம் அருகே சென்றடைந்த போது அவர்களை போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதேபோல் காரில் வந்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன், குலசேகரத்தில் இருந்து காரில் வந்த மாவட்ட துணைத் தலைவர் ஷீலா பிரசாத் தலைமையில் வந்த பா.ஜ.க.வினரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் உண்ணிகிருஷ்ணன், நகர தலைவர் நாகராஜன் மற்றும் 23 பெண்கள் உள்பட 114 பேரை கைது செய்து தக்கலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் பா.ஜ.க. திருவட்டார் மண்டல தலைவர் சுவாமிதாஸ் தலைமையில் வந்த 18 பேரை அழகிய மண்டபம் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 590 பேர் கைது செய்யப்பட்டனர். மண்டைக்காட்டில் போராட்டம் முடிவடைந்ததும் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story