பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழ்நாட்டில் கோவை, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க. மற்றும் இந்துமத அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு, அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் பறவைகள் சாலையில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம், உறையூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதைத்தவிர, மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இரவிலும் விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.