பா.ஜ.க. நிர்வாகியை தாக்கியவர் திருச்சியில் கைது
பெரியபட்டினத்தில் பா.ஜ.க. நிர்வாகியை தாக்கியவர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டினம் இலங்காமணி பகுதியை சேர்ந்தவர் ரீகன் (வயது 36). பா.ஜ.க. ஓ.பி.சி. அணியின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியபட்டினத்தில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு மனைவியுடன் சென்றுவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தலையில் ரத்த காயத்துடன் ரீகன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.. இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து ரீகன் அளித்த தகவலின்படி பெரியபட்டினம் வடக்குத்தெருவை சேர்ந்த ஜலாலுதீன் மகன் அசன் முகைதீன் (28) என்பவரை தேடிவந்தனர். இந்நிலையில் அவர் திருச்சியில் ஒரு அறையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.