பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
வேதனையை மட்டும் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வேதனையை மட்டும் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. முப்பெரும் விழா
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா இன்று நடைபெற் றது. விழாவிற்கு பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.
துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். முதன்மை செயலாளர் கே.என்.நேரு வாழ்த்தி பேசினார்.
வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
இதில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பெரியார் விருதை சத்தியசீலனுக்கும், அண்ணா விருதை சுந்தரத்துக்கும், கலைஞர் விருதை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருதை மல்லிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருதை ராமசாமிக்கும் வழங்கி பேசினார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் வளர்ச்சி
இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி, தமிழினத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது.
தமிழ்நாடு என்ற மாநிலத்தை அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப்பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பா.ஜ.க. செய்துகொண்டு வருகிறது.
நிதி ஆதாரம்
ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரிவருவாய்தான். அந்த வரிவருவாயை கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்படவிடாமல் முடக்குகிறார்கள். மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான்.
நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டுவந்து, நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள். நான் கேட்பது, நிதியை வசூல் செய்கிறீர்களே, அதை முறையாக பிரித்துக்கொடுக்கிறீர்களா? அதுவும் இல்லை.
இரக்கமற்ற அரசு
மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
சில தனியார் 'கோச்சிங் சென்டர்'களின் லாபத்துக்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள்.
இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கான காரணத்தை மத்திய பா.ஜ.க. அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது.
குளிர்காய பார்க்கிறார்கள்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எத்தளை வாக்குறுதி கொடுத்தார்கள்? நிறைவேற்றினார்களா?, நேற்று ஒரு தாய்மார் கேட்கிற மாதிரி, போனில் மீம்ஸ் பார்த்தேன். "எங்கள் முதல்-அமைச்சர் சொன்ன ரூ.1,000 வந்தாச்சு… பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?" - இது வைரல் ஆகிவிட்டது.
தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. உதாரணத்துக்கு ஒன்று கேட்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015-ம் ஆண்டு சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக்கூடாது என்றுதான் மற்ற பிரச்சினைகளை கிளப்பி குளிர்காய பார்க்கிறார்கள்.
முற்றுப்புள்ளி
சரி என்ன சாதனை இந்த 9 வருடத்தில் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை ரூ.420. இதை ரூ.1,100-க்கு உயர்த்தியதுதான்
மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக, இப்போது ரூ.200-ஐ மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா?. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்கு தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின்படி மட்டும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்க பார்க்கிறார்கள். இந்த ஊழல் முகத்தை கிழித்தெறிய வேண்டும்.
இதுதான் நம் முன் இருக்கும் முக்கிய கடமை. பா.ஜ.க.வின் ஊழல் முகத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஆகவேண்டும்.
அரசியல் கடமை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமது கூட்டணிதான் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாகவேண்டும். அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
நம்முடைய ஆட்சி மத்தியில் அமைந்தால் இங்கு நாம் அமல்படுத்திவரும் திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டுசேர்க்கமுடியும்.
இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித்தரத்தான் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க 'இந்தியா' கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கை கடமையும்தான்!.
கலைஞரின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பதுதான். தி.மு.க. பவள விழா ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது, இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணி கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்துவோம் என்பதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. செயலி
விழாவில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை கட்சியின் பொதுச்செயலாளரும் துரைமுருகன் தொடங்கிவைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், ஆர்.காந்தி, எ.வ.வேலு, முத்துகருப்பன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, கீதாஜீவன், பி.டி.ஆர்.தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், அமலுவிஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொகுத்து வழங்கினார். முடிவில் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.