பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் மருத்துவ பொதுக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு இருக்கிறது -அமைச்சர் பேட்டி


பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் மருத்துவ பொதுக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு இருக்கிறது -அமைச்சர் பேட்டி
x

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் கூட மருத்துவ பொதுக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மருத்துவக் கல்லூரியில், 187-வது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 248 மாணவர்கள் பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவர் வீரசிவபாலன் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்றிருக்கிறார். சென்னை மருத்துவக் கல்லூரியின் மிகப்பெரிய விருதான ஜான்சன் பதக்கத்தையும் பெற்றிருக்கிறார். அதேபோல் மாணவிகளில் ஜான்வி என்ற மாணவி அதிக மதிப்பெண்கள் எடுத்து, அதிக பதக்கங்களை பெற்றிருக்கிறார்.

முதலிடம்

இந்த மருத்துவக் கல்லூரி இந்தாண்டு தேசிய நிறுவன தரவரிசைப் பட்டியலில் 11-வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு 12-வது இடத்தையும், அதற்கு முந்தைய ஆண்டு 16-வது இடத்தையும் பெற்றிருந்தது. ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதும் 680 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 259, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 49, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் மருத்துவக் கல்லூரிகள் 372 உள்ளன.

அதில் தரவரிசைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் 176, அதில் நம் சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்தை பெற்றுள்ளது என்பது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். மேலும் மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரை சென்னை மருத்துவக் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது கலந்தாய்வு இல்லை

கடந்த மாதம் பொதுக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டவுடனே துறையின் செயலாளர் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தை பொறுத்தவரை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான பொதுவான கலந்தாய்வு என்பது மாநிலங்களின் பங்கை குறைக்கும் நோக்கம் கொண்டது, கல்வி விதிமுறைகளுக்கு முரணானது என்று பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டும் இதுதொடர்பான தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதன்படி இந்தாண்டு பொதுக் கலந்தாய்வு நடத்தப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இனி வருங்காலங்களில் இத்தகைய பொதுக் கலந்தாய்வு நடத்த முயற்சி மேற்கொண்டால் அதனை தடுக்கும் முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

மத்திய சுகாதார மந்திரியை பொது கலந்தாய்வு முறையை ரத்து செய்வது தொடர்பாக விவாதிக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நடத்து முடிந்தவுடன் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே 6 புதிய மருத்துவக் கல்லூரிகள், 30 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரிகள் கேட்கப்பட்டு, தற்போது 11 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ளவற்றை கேட்டு பெற அடுத்த மாதம் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரியை சந்தித்து விவாதிக்கவுள்ளோம்.

'நீட்' தேர்வு

'நீட்' தேர்வைப் பொறுத்தவரை எந்த மாநில மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் கூட இந்த 'நீட்' தேர்வு மற்றும் பொது கலந்தாய்விற்கு எதிர்ப்புகள் இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், மருத்துவப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story