பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் தேங்காயை சேர்த்து வழங்கிட கோரி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி பொது செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
முன்னதாக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக 4 மூட்டைகளில் தேங்காய்களை ஆட்டோவில் ஏற்றி வந்தனர். அதனை ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி தேங்காய்களை பறிமுதல் செய்தனர். அப்போது தேங்காய்களை கொடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று பா.ஜ.க.வினர் கூறினர்.
இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்த தேங்காய்களை பா.ஜ.க.வினரிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் தேங்காய்களை கையில் வைத்தபடி பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொது செயலாளர்கள் ரமேஷ், முருகன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர்கள் அருணை ஆனந்தன், கவிதா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், ராஜ தமயந்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் நேரு, தருமன், விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.