ஆவணப்படம் ஒளிபரப்புவதை கண்டித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட முயற்சி


ஆவணப்படம் ஒளிபரப்புவதை கண்டித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட முயற்சி
x

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆவணப்படம் ஒளிபரப்புவதை கண்டித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். அவர்கள் 45 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

மறியலில் ஈடுபட முயற்சி

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-அமைச்சராக இருந்தபோது அங்கு நடைபெற்ற மத கலவரம் சம்பந்தமாக லண்டன் பி.பி.சி. நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அந்த ஆவணப்படத்தை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆ.சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதையறிந்த, அரியலூர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையிலான பா.ஜ.க.வினர், பி.பி.சி.-யின் ஆவணப் படத்தை ஒளிபரப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

கைது

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயங்கொண்டம் போலீசார் 6 பெண்கள் உள்பட பா.ஜ.க.வினர் 45 பேரை கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிரான ஆவணப்பட ஒளிபரப்பை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தி.மு.க. தோழமைக் கட்சிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட முயற்சித்த பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் பயங்கர தள்ளு-முள்ளு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வினர் அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் மாவட்ட தலைவர் நான்கு ரோட்டு பகுதியில் மறியல் செய்யவும், அங்கிருந்து ஆவணப்படம் திரையிடப்படும் இடத்திற்கு செல்வதற்காகவும், தீவிர முயற்சி செய்தார். இறுதியில் முயற்சி தோல்வியுற்றது. இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story