திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா


திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா
x

திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சி மாநகராட்சி 31-வது வார்டுக்குட்பட்ட வரகனேரி பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டி 2 நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாக கூறியும், அன்னைநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக ஒரு வீட்டை இடித்த அதிகாரிகளை கண்டித்தும் பா.ஜ.க. மண்டல் தலைவர் மல்லி செல்வம் தலைமையில், மாவட்ட தலைவர் ராஜசேகர், மாவட்ட செயலாளர்கள் வேளாங்கண்ணி, ஜெயந்தி வெங்கட்ரமணன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் சந்தோஷ், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் மரியாவின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை திருச்சி மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி முன்பே அறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் முருகவேலு, இன்ஸ்பெக்டர் நிக்சன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களில் 10 பேரை மட்டும் மாநகராட்சி உதவி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர். அங்கு வாக்குவாதம் முற்றியதால் பா.ஜ.க.வினர் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி இது குறித்து மனு அளிக்கும்படியும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story